Friday 5 June 2015

கண்ணன்<-----> மீரா

"கண்ணன் வருவான்"
என அழுது முடிகிறது
மீராவின் அலைவரிசை

காத்திருந்தவளின் காதலுக்கு
பதிலே சொல்லாமல்
சர்ப்ப படுக்கையில்
துயலுகிறான் அனந்தன்
அல்லது
துயலுவது போல் நடிக்கிறான்

யாருக்கு தெரியும்
எல்லாம் அந்த
நாராயணனுக்கே வெளிச்சம்

கேட்கிறதா என்று
ஒருமுறையேனும் கேட்டு
தெரிந்து கொண்டப் பிறகு
மீட்ட ஆரம்பித்திருக்கலாம் மீரா

அவளின் தோடி ராகமும்
ஆதி தாளமும் அறிந்தவனா அனந்தன்
பார்த்தால் அப்படி தெரியவில்லையே
தாலாட்டு கேட்பது போல்
துயிலுகிறானே

கல்லால் சிலை செய்து
வழிப்பட்டால் என்பதற்காக
நெஞ்சமும் கல்லாகி
போனதோ அனந்தனுக்கு

மறுபடியும் கலியுகத்தில்,

தூரத்தில் ஒரு தோடி ராகம்
ஆதி தாளத்தோடு
யூகம் பல கடந்தாலும்
காதல் மாறுவதில்லை
மீரா திருந்தவே போவதில்லை

போகிற போக்கில்
கேட்டு விட்டு போகலாம் என
பார்த்தால் மீட்டுவது
மீரா அல்ல

யாரென பக்கம்
போய் பார்த்தால்
குழலோடு கண்ணன்

யாரது ? அனந்த பரமனா
அகிலத்தை மூன்றடியில்
அளந்த பரம்பொருளா
காக்கும் திருவருளா

காக்கை கூட
எட்டி பார்க்காத
இக்கானகத்தில் தனிமையில்
குழல் மீட்டுவது ஏன் ?

கலியுக குருச்சேத்திரத்தில்
வாகை சூட
அசுவமேத யாகமோ ?

குழலோசையில் போரின்
குரூரம் தெரியவில்லையே
அவளுக்குகென ஏங்கும்
ஆழ்மனவலியே தெரிகின்றனவே

இரணியின் வயிறு பிளக்க
தூண் உடைத்து வெளிவந்த
நரசிம்மனே கலியுகத்தில் கல்லாகிபோனான்
குழல் மீட்டும் கண்ணன்
தப்புவது எப்படி?

கல்லை தாண்டி நடந்த போது
மனிதம் பேசியது

எத்தனை நாள் தான்
கண்ணனுக்காக மீரா மீட்டுவது
இந்த கலியுக மகாபாரதத்திலாவது
கண்ணனும் மீட்டடுமே மீராவுக்காக
                                                                          - அவளுக்காக